(22) அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
(23) அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
(24) எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு "நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்" என்று கூறப்படும்.
(25) (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
(26) இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
(27) இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
(28) (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).
(29) அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
(30) நிச்சயமாக நீரும் மரிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
(31) பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு)வாது செய்வீர்கள்.