(41) நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
(42) அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(43) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! "அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?" (என்று.)
(44) "பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(45) மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன் மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
(46) "அல்லாஹ்iவே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(47) மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.