(57) அல்லது "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
(58) அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
(59) (பதில் கூறப்படும்;) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்."
(60) அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
(61) எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
(62) அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
(63) வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.
(64) "அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(65) அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்).
(66) ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
(67) அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.