(8) "எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
(9) "இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்).
(10) நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; "இன்னு நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.
(11) அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
(12) (பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
(13) அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
(14) ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
(15) (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
(16) அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.