(75) இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். "அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.
غافر Ghafir
(1) ஹா, மீம்.
(2) (யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
(3) பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
(4) நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
(5) இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
(6) இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
(7) அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!