(50) "உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.
(51) நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
(52) அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகழ் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
(53) நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
(54) (அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
(55) ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
(56) நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
(57) நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
(58) குருடரும், பார்வையுடையோரும் சமமாகார் அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.