(78) திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
(79) அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
(80) இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
(81) இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
(82) இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
(83) ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
(84) எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்.
(85) ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.