(23) "நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
(24) "அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
(25) "வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
(26) "அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது கூறிற்று).
(27) (அதற்கு ஸுலைமான்;) "நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்" என்று கூறினார்.
(28) "என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி" (என்று கூறினார்).
(29) (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: "பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது."
(30) நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று (துவங்கி) இருக்கிறது.
(31) "நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).
(32) எனவே பிரமுகர்களே! "என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீ; ங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று கூறினாள்.
(33) "நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்" என்று அவர்கள் சொன்னார்கள்.
(34) அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
(35) "ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்."