(77) மேலும்; நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
(78) நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
(79) எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
(80) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
(81) இன்னும்; நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
(82) அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
(83) (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
(84) அவர்கள் யாவரும் வந்ததும்; "நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான்.
(85) அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
(86) நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(87) இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்வர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
(88) இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.