(36) அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது அவர் சொன்னார்; "நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
(37) "அவர்களிடமே திரும்பிச் செல்க நிச்சமயாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்" (என்று ஸுலைமான் கூறினார்).
(38) "பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
(39) ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்."
(40) இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார்.
(41) (இன்னும் அவர்) கூறினார்; "(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்."
(42) ஆகவே, அவள் வந்த பொழுது, "உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்; "நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது" என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
(43) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
(44) அவளிடம்; "இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!" என்று சொல்லப்பட்டது அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்;) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), "அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!" என்று கூறினார். (அதற்கு அவள்) "இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்" எனக் கூறினாள்.