(89) (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
(90) இன்னும்; எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; "நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?" (என்று கூறப்படும்.)
(91) "இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன்" (என்று நபியே! நீர் கூறுவீராக).
(92) இன்னும்; குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்."
(93) இன்னும் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
القصص Al-Qasas
(1) தா, ஸீம். மீம்.
(2) இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
(3) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
(4) நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
(5) ஆயினும் (மிஸ்று) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசகளாக்கவும் நாடினோம்.