(56) அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) "லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!" என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
(57) ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம் அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
(58) இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.
(59) (நபியே!) நீர் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?"
(60) அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
(61) இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
(62) கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும்.
(63) கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.