(114) (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
(115) எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
(116) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
(117) அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்; லை. இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
(118) அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்" என்றும்,
(119) "இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(120) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
(121) இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்;. அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.