(148) அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
(149) நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
(150) நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
(151) இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
(152) யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
(153) (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
(154) மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.