(80) எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
(81) (நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;. உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்;. அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்;. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
(82) அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(83) மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
(84) எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
(85) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
(86) உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.