(155) அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன." (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(156) இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
(157) இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(158) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(159) வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
(160) எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
(161) வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
(162) எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.