(106) (தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
(107) ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
(108) இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
(109) (முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
(110) எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
(111) எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(112) மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
(113) (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.