(43) அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
(44) எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
(45) அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
(46) நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
(47) அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
(48) ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
(49) அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
(50) ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
(51) மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.
(52) ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.
الحاقة Al-Haaqqa
(1) நிச்சயமானது.
(2) நிச்சயமானது எது?
(3) அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(4) ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
(5) எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
(6) இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
(7) அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
(8) ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?