(103) "நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
(104) நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
(105) நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.
(106) எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
(107) ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(108) அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.
(109) சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள்.
(110) இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.