(35) "அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்" என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).
(36) மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
(37) (நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
(38) இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
(39) (இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).
(40) ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.
(41) கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது
(42) இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.