(43) (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).
(44) தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
(45) தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?
(46) அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறு செய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.
(47) அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.
(48) அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடதுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ் வழிபடுகின்றன.
(49) வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவாகள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
(50) அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.
(51) இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சங்கள்.
(52) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சகிறீர்கள்?
(53) மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
(54) பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.