(15) உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
(16) (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
(17) (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?
(18) இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
(19) அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.
(20) அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
(21) அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர் மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
(22) உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
(23) சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
(24) "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
(25) கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.
(26) நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.