(119) பிறகு, நிச்சயமாக உம் இறைவன் எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(120) நிச்சயமாக இப்றாஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார் மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
(121) (அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.
(122) மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.
(123) (நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
(124) "சனிக்கிழமை (ஓய்வு நாள்)" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.
(125) (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
(126) (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
(127) (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
(128) நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.