(55) நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நனிறியில்லாது) நிராகரிக்கும் வரையில் - ஆகவே (இம்மையில் சிலகாலம்) சகித்திருங்கள் - பின்னர் (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள்.
(56) இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
(57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
(58) அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
(59) எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
(60) எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கு மிக உயர்ந்த தன்மை இருக்கிறது மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
(61) மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
(62) (இன்னும்) தாங்கள் விரும்பதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றான் நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
(63) அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
(64) (நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.