الشعراء Ash-Shu'araa
(1) தா, ஸீம், மீம்.
(2) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகவும்.
(3) (நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
(4) நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
(5) இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
(6) திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
(7) அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
(8) நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
(9) அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
(10) உம் இறைவன் மூஸாவிடம் "அநியாயக்கார சமூகத்திடம் செல்க" என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
(11) "ஃபிர்அவ்னின் சமூத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
(12) (இதற்கு அவர்) "என் இறைவா! அவர்கள் என்னை பொய்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
(13) "என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
(14) "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
(15) (அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்" எனக் கூறினான்.
(16) ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்; "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
(17) "எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!" (எனவும் கூறுங்கள்.)
(18) (ஃபிர்அவ்ன்) கூறினான்; நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
(19) "ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்" (என்றும் கூறினான்).