(61) இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
(62) அதற்கு (மூஸா), "ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்" என்று கூறினார்;.
(63) உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(64) (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
(65) மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
(66) பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
(67) நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
(68) (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
(69) இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
(70) அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டபோது,
(71) அவர்கள்; "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.
(72) (அதற்கு இப்றாஹீம்) கூறினார் "நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
(73) "அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவும் கேட்டார்)
(74) (அப்போது அவர்கள்) "இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்" என்று கூறினார்கள்.
(75) அவ்வாறாயின், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கூறினார்.
(76) "நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்)."
(77) "நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்)."
(78) "அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
(79) "அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்."
(80) "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
(81) "மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்."
(82) "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
(83) "இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!"