(141) நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
(142) உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
(143) நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
(144) முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
(145) மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
(146) மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
(147) மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
(148) ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.