(53) "எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
(54) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
(55) "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
(56) எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
(57) ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
(58) (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
(59) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(60) (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
(61) (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும்.