(78) நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
(79) ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
(80) மேலும் அவர், "மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
(81) (நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.
(82) எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
(83) அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.