(46) "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."
(47) (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."
(48) இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
(49) இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
(50) "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்."
(51) "நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."
(52) அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.