(84) "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(85) இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(86) அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
(87) நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
(88) இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
(89) எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
(90) எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
(91) எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.