(187) தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
(188) எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
(189) வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(190) நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
(191) அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;).
(192) "எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).
(193) "எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
(194) "எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).