(164) (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்."
(165) அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
(166) தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
(167) (நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
(168) அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கின்றார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
(169) அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்;. இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், "அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப் படவில்லையா?" (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
(170) எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.