الأعراف Al-A'raaf
(1) அலிஃப், லாம், மீம், ஸாத்.
(2) (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
(3) (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
(4) (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
(5) நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்; "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
(6) யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
(7) ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
(8) அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
(9) யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
(10) (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
(11) நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.