(96) நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
(97) அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
(98) அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
(99) அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்ட வாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
(100) பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
(101) (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
(102) அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாரோரைப் பாவிகளாகவே கண்டோம்.
(103) அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
(104) "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.