(179) நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
(180) அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
(181) நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.
(182) எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
(183) (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
(184) அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
(185) வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
(186) எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
(187) அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.