(74) இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).
(75) அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.
(76) அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.
(77) பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
(78) எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
(79) அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.
(80) மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"
(81) "மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."