(31) ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(32) (நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
(33) "என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள், பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
(34) ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
(35) ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
(36) ஆனால் நம் வசனங்களை பொய்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்வளோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
(37) எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.