(58) (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
(59) நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
(60) அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
(61) அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.
(62) "நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்று கூறினார்).
(63) உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
(64) அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.
(65) இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.
(66) அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
(67) அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.