(118) (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(119) ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
(120) மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
(121) இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
(122) முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.