(55) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
(56) நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
(57) ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
(58) (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
(59) அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
(60) (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(61) (இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்." எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.