(112) மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
(113) முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
(114) இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறிலலை மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
(115) எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
(116) வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
(117) நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.