(7) அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
(8) (எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
(9) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
(10) அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்."
(11) ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
(12) அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
(13) தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.