(27) அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
(28) ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(29) வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள; ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
(30) யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
(31) அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.