(48) நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
(49) "(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்" என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
(50) உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்" என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
(51) "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(52) (நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
(53) (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
(54) அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.