(62) (முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
(63) எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
(64) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்; " நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்."
(65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
(66) புகழ் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
(67) நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
(68) நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு.