(73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
(74) இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
(75) அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
(76) (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
(77) எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
(78) அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா,
(79) இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.