(102) அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்;, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
(103) பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
(104) நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்).
(105) நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.
(106) (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
(107) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
(108) அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
(109) (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
(110) மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.