(9) நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
(10) (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
(11) "பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(12) "வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்" என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்" என்று கூறுவீராக அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(13) இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(14) "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
(15) "நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று கூறுவீராக.
(16) "அந்தாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்" (என்று கூறுவீராக).
(17) "(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(18) அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.