(69) (வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொருப்பாகும்.
(70) (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(71) (நபியே!) நீர் கூறும்; "நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டியபின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் "எங்கள் இடம் வந்து விடு" என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்ததால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்." இன்னும் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்."
(72) தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
(73) அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.